
சேலைத் தலைப்பை இழுத்துக் கீழே தள்ளி விட்டு
தயக்கத்தோடு படியில் தொற்றிக் கொள்கிறேன்
பேருந்தின் கர்ப்பத்துக்குள்
மெதுமெதுவாகத் தள்ளப்படுகிறேன்
வியர்வையில் தெப்பமாகி
இடைவெளிகளிடையே நகர்த்தப்படுகிறேன்
விழுந்திடாதிருக்க முயற்சிக்கிறேன்
சரிகிறேன் எழுகிறேன்
சூழவும் எதுவும் தென்படாத அதியுச்ச தள்ளுகைகளிடையே
நான் சிந்திக்கிறேன்
‘யார் நான்
கவிஞரா
மிக அழகிய இளம்பெண்ணா
அவ்வாறும் இல்லையெனில்
உயர் பதவியேதும் வகிப்பவளா
காதலியா தாயா அன்பான மனைவியொருத்தியா
இதில் எது பொய்யானது
தீயாயெரியும் பேருந்தொன்றுக்குள் சிறைப்பட்டு
களைப்போடு துயருறும் விலங்கொன்றுதான் நானன்றி
இக் கணத்தில் வேறெவர்?’
யதார்த்தம் என்பது என்ன
பேருந்திலிருந்து இறங்கி
வீட்டில் காலடி வைக்கும் கணம்
குறித்துக் கனவு காண வேண்டுமா
குளிர்ந்த நீரில் உடல் கழுவி
தேனீரைச் சுவைக்கும் விதம் பற்றிச் சிந்திக்க வேண்டுமா
எனில் யதார்த்தம் எனப்படுவது இக் கணம்தான்
பெரும் காரிருளில் மூழ்கி
இருப்பின் துயரத்தை அனுபவிக்கும் விலங்கொன்றாக மட்டும்
என்னை நானே சந்திக்கும் இக் கணம்
‘நான்’ வீழ்ந்துடைந்து அழிந்துபோகும் இக் கணம்
கவிஞனான போதும்
இடரை அனுபவிப்பது இப் பேரூந்தினுள்ளேதான்
வைத்தியரோ வேறெவராயினுமொருவரோ
பெண்ணோ ஆணோ
தெள்ளத் தெளிவாகத் துயரனுபவிக்கும்
விலங்கொன்றன்றி வேறெவர்
இது இக் கணத்தின் யதார்த்தம்
இக் கணம் துயரத்திலிருந்து தப்பிக்கச் செய்யும்
கதவைக் காணக் கூடிய கணம்
பேரூந்திலிருந்து இறங்கிச் செல்ல முன்பு
வெளிச்சம் என்னை நெருங்கட்டும்
இவ் வாழ்வைப் பிணைத்திருக்கும் கயிறு தளர்ந்து போகட்டும்.
- ஷஸிகா அமாலி முணசிங்க
Original Post - මේ මොහොතය සත්යය
Translated by M. Rishan Shareef
Picture - Diana Pascu
nice
ReplyDelete